சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, "பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. வரும் ஜூன் 20- ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 19- ஆம் தேதி வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 20- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 110 இடங்களில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தி தரப்படும். பொறியியல் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 16- ஆம் தேதி அன்று தொடங்கும். மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு முதல் மூன்று நாட்கள் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.
பொதுக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 14- ஆம் தேதி வரையும், துணைக் கலந்தாய்வு வரும் அக்டோபர் மாதம் 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு வரும் ஜூன் 27- ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும். கலந்தாய்வு முடிந்து ஏழு நாட்களுக்குள் மாணவர்கள் முன் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்" என்றார்.