கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் பல கேள்விகளை முன்வைத்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.கவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரச்சனையை முடித்துக் கொள்கிறோம் என அன்னபூர்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அன்னபூர்ணா நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கடந்த 11 செப்டம்பர் 2024 புதன்கிழமையன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோயம்புத்தூரில் உள்ள சிறும் குறு வியாபாரிகள் மற்றும் வர்த்தக சபையின் பிரதிநிதிகளின் உரையாடலின் போது எங்கள் நிர்வாக இயக்குநர், டி.ஸ்ரீனிவாசன், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்த கேள்விகளை எழுப்பினார். இந்த உரையாடலின் போது செய்தித் துணுக்குகள் மற்றும் வீடியோக்கள் வைரலானதால், அடுத்த நாள் அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதி அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ, சமூக ஊடகங்களில் தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை தவறாகப் பகிர்ந்ததற்காக தமிழக பா.ஜ.க மன்னிப்புக் கோரியுள்ளது. அதன் விளைவாக வீடியோவை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைப்புகள் மற்றும் அமைப்புகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக ஜிஎஸ்டி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக நிதி அமைச்சருக்கும், எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். எங்கள் விஸ்வாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.