Skip to main content

“மாவட்டங்களை பிரிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் பாமக நடத்தும்” - அன்புமணி ராமதாஸ் 

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

Anbumani said Tiruvannamalai should be divided into two districts

 

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருவண்ணாமலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி, "தமிழ்நாட்டின் நிலப் பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். முதலாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 12 கோட்டங்கள் உள்ளன. திருவண்ணாமலை, ஆரணி இரண்டு மக்களவைத் தொகுதியில் தலா 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 

 

மக்கள் தொகையைப் பொறுத்தவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் பேர் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மாவட்டமாக இருப்பதனால் தான் இன்னும் வளர்ச்சி பெறாமல் உள்ளது. உதாரணத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் தூசி என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த தூசி கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறும் ஐந்து கிலோமீட்டர் தான். ஆனால் தூசி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் 115 கிலோமீட்டர் தூரம் உள்ளது. 

 

இந்த மாவட்டத்தின் மேற்கு எல்லையிலிருந்து  கிழக்கு எல்லைக்கு போக வேண்டும் என்றால் கிட்டதட்ட 168 கிலோமீட்டர் தூரம் உள்ளது.  இந்த மாவட்டத்தை நீண்ட காலமாக பிரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை,  தமிழ்நாட்டில் உள்ள பெரிய பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அந்த மாவட்டத்திற்கு வளர்ச்சி வரும். இதற்கு பல உதாரணங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ளன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் மாவட்டங்களை பிரிப்போம் என்பது அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி. அப்படி செய்யவில்லை என்றால் பெருமளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

 

கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க போகிறார்கள் என்று சொன்னபோதெல்லாம் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலம் எடுக்க போவதாக கூறினேன். அதன் பிறகு கொதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் நிலம் எடுப்பதாக நான் கூறியபோது ஒருத்தன் கூட வரவில்லை, ஒருத்தன் கூட குரல் கொடுக்கவில்லை, ஒரு கட்சித் தலைவர் கூட அதைப் பற்றி பேசவில்லை. விவசாய சங்கங்கள் யாரும் வரவில்லை. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் எடுக்கப் போகிறார்கள் என்று சொன்னவுடன் உடனே குதிக்கிறார்கள். போராட்டம் நடக்கிறது, என்னென்னமோ நடக்கிறது. கடலூர் மாவட்டம் என்றால் அவ்வளவு ஏளனமாக இருக்கிறதா? தஞ்சாவூர் மாவட்டம் என்றால் இனிக்கிறதா? கடலூர் மாவட்டம் கசக்கிறதா என்ன காரணம் தெரியுமா? சாதி. 

 

கடலூர் மாவட்டமும் டெல்டா பகுதியில் தான் வருகிறது. டெல்டா என்றால் இவர்களை பொறுத்தவரை தஞ்சாவூர் டெல்டா, டெல்டா என்றால் திருவாரூர் டெல்டா என நினைத்து விடுகிறார்கள். கொள்ளிடம் ஆறு கடலூர் மாவட்ட எல்லையில் தான் ஓடுகிறது. கொள்ளிடமும் காவிரியின் கிளை ஆறு தான். கொள்ளிடம் கடலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தாண்டி வடக்கில் வருகிறது. அதுவும் டெல்டாதான். அங்கு தான் இவர்கள் நிலக்கரி எடுக்குறாங்க. அதற்கு தான் நான் போராடி வருகிறேன். ஒருத்தர் லெட்டர் கொடுத்தாராம் நிலக்கரித்துறை அமைச்சருக்கு, லெட்டர் கொடுத்தாராம் யாரு? அண்ணாமலை. தேர்தல் பணிக்காக கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை. நான் இங்கு காலை அறிக்கை விடுகிறேன். மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

உடனே ஒரு கடிதத்தை தயார் செய்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மத்திய அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார், நேற்று அமைச்சர் டிவிட் போடுகிறார், நாங்கள் அந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் ஏலப் பட்டியலில் இருந்து எடுத்து விட்டோம் என்கிறார். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், நிலக்கரி சுரங்கம் ஏலப் பட்டியில் இருந்து மட்டும் தான் எடுத்துள்ளார்கள். நாளை வேறு யாராவது நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுத்து நடத்தலாம். என்எல்சிக்காரன் கூட எடுத்து நடத்தலாம். இது கூட யாருக்கும் தெரியவில்லை. இதற்கு எல்லோரும் வெற்றி வெற்றி என பதிவு போட்டுக் கொண்டிருக்கிறான். என்னால்தான் வெற்றி, உங்களால் தான் வெற்றி என்று, இதில் என்ன வெற்றி இருக்கு? முதலில் சொன்னவனே நான் தான். நான் கூட அதை வெற்றி என்று சொல்லவில்லை. இன்னும் ஏமாற்றம் என்று தான் சொல்லி வருகிறேன். இன்னும் ஆர்டர் கூட கையில் வரவில்லை வெறும் டுவிட் மட்டும் தான் போட்டு இருக்கிறார். அங்கு நிலக்கரி சுரங்கம் வராது என்று மத்திய அமைச்சர் உறுதி அளிக்கவில்லை. அண்ணாமலை சார்ந்த கட்சியே நிலக்கரி சுரங்கத்திற்கு ஏலம் விடுவார்களாம். அதற்கு பிறகு அவர்களே அதை எதிர்த்து கடிதம் கொடுப்பார்களாம். அதற்கு அப்புறம் லெட்டர் கொடுத்த பிறகு அவர்களே அந்த வெற்றியை கொண்டாடுவார்களாம். இது என்ன..? இதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இது ஒரு பக்கம் நடக்கிறது. 

 

அடுத்தது இந்த பக்கம் திமுகவினர்,  எங்களுக்கு வெற்றி, எங்கள் முதலமைச்சருக்கு வெற்றி, எங்கள் தலைவருக்கு வெற்றி என்று சொல்லிக் கொள்கிறார்கள். 'நாங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம். நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம். இதுதான் எங்களுடைய கொள்கை முடிவு என்று முதல்வர் ஸ்டாலின் (தமிழக அரசு) சொன்னால், மத்திய அரசு ஒரு சென்ட் நிலத்தை எடுத்து விட முடியுமா? அதை விட்டுவிட்டு, மத்திய அமைச்சர் ஏதோ ஒரு டிவிட் போட்டாராம், அதை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்