விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக எங்களுக்கு கிடைத்த அருமையான அண்ணன் விஜய். நான் பல நேரங்களில் பேசும் போது அவர் அன்புடன் பேசக்கூடியவர்தான். நீங்கள் நடிகராக பார்க்கிறீர்கள், கட்சியின் தலைவராக பார்க்கிறீர்கள்; ஆனால் நாங்கள் என்றைக்குமே விஜய்யை எங்களுடைய அண்ணனாகத்தான் பார்க்கிறோம். அவரும் மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நேற்றே எங்களது இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி விஜய்யின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று கூறினார், அவரின் வாழ்த்துகளுடன் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
சினிமாவில் இருந்து வந்த விஜயாகாந்த்கூட கட்சியின் பெயரில் திராவிடம் என்ற சொல்லை இணைத்திருந்தார். ஆனால் விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லாததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்விக்கு, “கட்சி தொடங்குவது அவரது சொந்த விருப்பம்; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதேபோன்று கட்சிக்கு பெயர் வைப்பதும் அவரது விருப்பம். கட்சியின் கொள்கைகள் எல்லாம் வெளியிடும்போதுதான் எந்த எண்ணத்தில் கட்சி ஆரம்பித்தார் என்று தெரியவரும் என பதிலளித்தார்.