Skip to main content

அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கக் கூடாது... கலவரமாகிக் கிடக்கும் மயிலாடுதுறை!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Ambedkar memorial day problem in mayladudhurai

 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.

 

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அம்பேத்கர் உருவப் படத்தை வைத்து மரியாதை செய்துவருகின்றனர். தலைஞாயிறை அடுத்துள்ள பட்டவர்த்தி கடைவீதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் அம்பேத்கர் உருவப் படத்தை வைத்து மாலை அணிவிக்க அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Ambedkar memorial day problem in mayladudhurai

 

அங்கு அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க மாட்டோம் என அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட, மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

இதற்கிடையில், பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க வி.சி.க. கட்சியினர் சென்றபோது, மற்றொரு பகுதியில் குழுமியிருந்த மற்றொரு சமூகத்தினர் கல், கழி, கம்புகளை வீசி கலவரமாக்கினர். இதில் நான்கு பேருக்கு மேல் காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர், இதனால் அந்தப் பகுதியே பதற்றச் சூழலுக்கு உள்ளானது.

 

 

சார்ந்த செய்திகள்