Skip to main content

அம்பேத்கர் நினைவு நாள்; அஞ்சலி செலுத்த அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்தனர். இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே காவல்துறையினரால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது.

 

முன்னதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் போது பாதுகாப்பு வழங்க பட்டினப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாதக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்தத் தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவித் துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் எனவும் அந்த உத்தரவாதக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.  

 

இந்நிலையில், நேற்று காலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் சார்பாக அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மாலை அம்பேத்கர் மணி மண்டபத்தில், அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த அர்ஜுன் சம்பத்தை விசிகவினர் உள்ளே விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் விசிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வன்னி அரசு உட்பட விசிகவினரை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் அடைத்து, பின்னர் சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்