தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், ம.ம.க. சார்பில் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் டாக்டர் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, பாமக சார்பில் ஜி.கே. மணி, காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின்போது அதிமுக, திமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைக்கு அனைத்துக் கட்சி சட்டமன்ற குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கிறார்.