கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று (12/01/2021) மதியம் சேலம் சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர், அந்த காரில் இருந்த அட்டைப் பெட்டிகளை போலீசார் திறந்து பார்த்தபோது, சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 220 உயர் ரக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த மது பாட்டில்கள், புதுவை மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது, அந்த பாட்டில் பண்டல்களை ஏற்றி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தியாகராஜன், தங்கமணி ஆகிய 2 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர், ‘பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. அதனால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தோம்’ என கூறுகின்றனர்.
இதேபோல் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் நேற்று ஆமூர் பகுதியில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் உரிமையாளர் மங்கையர்க்கரசி, அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதைப்போன்றே திருக்கோவிலூர் அடுத்த குரங்கன்தாங்கல் கிராமத்தில் கள்ளச்சாராயத்தைப் பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருக்கோயிலூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக செல்வம், அவரது மகன் கிரண்குமார், அறுமுகன், முருகன், ஐயனார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உள்ளதால், அந்த மூன்று நாட்களில் விற்பனை செய்வதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதுச்சேரி மது பாட்டில்களும் கள்ளச்சாராயமும் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யபவர்களைப் போலீசார் ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர். புதுச்சேரி சரக்கு கடத்தல் விற்பனை என்பது தமிழகத்தில் பல மாவட்டங்களில தொடர்ந்து நடைபெற்று வருகிறது.