நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது.