மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தும், விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி! அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.