விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லையில் ஓடுகிறது தென் பெண்ணையாறு. இந்த ஆற்றில் ஏனாதி மங்கலம் - தளவானூர் ஆகிய இரு கிராமங்களுக்கும் இடையில் சுமார் 25 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கடந்த ஆண்டு தடுப்பணை கட்டியது. இந்தத் தடுப்பணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அதன் ஷட்டர்கள், பக்கச்சுவர் ஆகியவை உடைந்து ஆற்றின் தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி அதே அணைக்கட்டின் இடதுபுறமாக உள்ள மதகு அருகில் மீண்டும் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அணை கட்டிய ஒரு ஆண்டில் இரண்டு முறை தடுப்பணை உடைப்பு ஏற்பட்டது. இதை தற்போதைய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு 15 கோடியில் அணை சீரமைக்கப்படும் என்று தெரிவித்துச் சென்றனர்.
ஏற்கனவே உடைப்பு எடுத்த கரையில் தண்ணீர் தொடர்ந்து செல்வதால் அதன் கரைகள் மீண்டும், மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆற்றின் தண்ணீர் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அணை உடைப்பு ஏற்பட்டு கரைப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் மணல் மூட்டைகளை அடுக்கிக் கரை உடைப்பைத் தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.