முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “2017 ஆம் ஆண்டு நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அப்பொழுது முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் போட்டேன். துப்பாக்கி முனையில் காவல்துறையினர் சிலையைக் கொள்ளையடித்த வழக்கு. அந்த வழக்கில் 47 பக்கத்திற்கு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஒருத்தர் கொடுக்கிறார். அவர்தான் டி.எஸ்.பி. அசோக் நடராஜன். என்னைப் பொறுத்தவரை என்னிடம் வேலை பார்க்கும் வரை அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்த அதிகாரிகளில் அவரும் ஒருவர். மிகவும் முக்கியமானவர்.
அசோக் நடராஜன் 47 பக்கத்திற்கு என்ன பதிவு போட்டாரோ, அந்த முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஈயடிச்சாங் காப்பி என்று சொல்வார்களே, அதுமாதிரி அதில் என்ன இருக்கிறதோ அதைப் போட்டுள்ளார்கள். அப்படி பார்க்கும்பொழுது, குற்றவாளி பட்டியலில் அவரது பெயரோ, என்னுடைய பெயரோ கடவுள் சத்தியமாக இல்லை. வந்த செய்திகள் தவறானது. சொல்லப்போனால் பொய்யானது. 100 விழுக்காடு அல்ல ஒரு லட்சம் மடங்கு பொய்யானவை.
தீனதயாளன் யாரு? 1958... நீங்க எல்லாம் அப்பொழுது பிறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது அபர்ணா ஆர்ட் கேலரியை தீனதயாளன் ஆரம்பிக்கிறார். அதன்பிறகு பேட்ச் பேட்ச்சாக பாம்பே போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கிட்டே இருக்கிறார். 1958-ல் இருந்து 58 வருஷத்தை கூட்டுங்க. 58 வருஷம் கழித்து சி.பி.ஐ.யோ, சி.பி.சி.ஐ.டி.யோ என யாரும் கைது பண்ணல. தீனதயாளனை நான்தான் முதன் முதலில் கைது செய்தேன். நீங்க போய் அவனை விட்டுட்டீங்கனு சொன்னா, அது நியாயமா?
1983-ல் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் எத்தனை அதிகாரிகள் இருந்திருப்பார்கள். அவர்களெல்லாம் எங்க போனார்கள். இவ்ளோ பேர் இருந்தாலும் 58 வருடம் கழித்து 783 சிலைகளோடு தீனதயாளனை பிடித்தேன். 731 தெய்வ விக்கிரகங்களை வீட்டில் இருந்து எடுக்கிறேன். அவருடைய ட்ரேடையே நிர்மூலமாக்கினேன். 2016-ல் அவரைப் புடிக்கிறேன். அப்போ எல்லாம் ஹைகோர்ட் எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை.
தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு டி.ஐ.ஜி., ஏழே ஏழு போலீசார். மாநிலம் முழுக்க கண்காணித்தேன். அக்கியூஸ்டு வீட்டிலேயே 30 நாட்கள் உட்காந்திருப்பேன் நான். அவர் 90 நாட்கள் உள்ளே இருப்பார். நான் வெளியே வந்து இரண்டே முக்கால் வருடங்கள் ஆகிறது. என் மாதிரியே அந்த துறையில் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த இரண்டே முக்கால் வருடத்தில் இந்த வழக்கில் என்ன செய்தார்கள். இரண்டே முக்கால் வருடமாக குற்றப்பத்திரிகை போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுக்கு சம்பளம் வாங்குறீங்க மக்கள் வரிப்பணத்தில் என்று கேட்கலாமா, கேட்கக் கூடாதா?
அசோக் நடராஜன் இன்வெஸ்டிகேசன்ல வாக்குமூலம் வாங்கியவர். அவருக்கு ஆக்சிலரேட் ப்ரோமோஷன் கொடுத்திருக்க வேண்டும். யாரோ ஒருவர் காட்டில் கிரிமினலாக இருந்தார் (மறைமுகமாக வீரப்பனை குறிப்பிட்டு). அவரைப் பிடிச்சி சுட்டுப்போட்டாங்க. அதுக்கு 700 பேருக்கு ஆக்சிலரேட் ப்ரோமோஷன் கொடுத்தாங்க இன்க்ளூட்டிங் தோச சுட்டவரு, சப்பாத்தி சுட்டவருக்கெல்லாம் ஆக்சிலரேட் ப்ரோமோஷன் கொடுத்தாங்க.'' என்றார்.