கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சொல்லி அந்த மாநில அரசு தண்ணீர் திறக்க மறுத்துவந்தது. இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் விவசாயிகள், கன்னட அமைப்புகள், நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதேபோல், நடிகர்கள் சார்பில் அந்த மாநிலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் எத்தனையோ கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும், அனைவரும் ஒன்று கூடி அவர்கள் மாநிலத்திற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஏன் அந்த ஒற்றுமை தமிழ்நாட்டில் இல்லை. இன்று கர்நாடகாவில் நடிகர் சிவ ராஜ்குமார் தலைமையில் நடிகர்களெல்லாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, கர்நாடகா தண்ணீர் வழங்காததைக் கண்டித்து ஒட்டுமொத்த நடிகர்களை அழைத்து உண்ணாவிரதம் இருந்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. காவிரி பிரச்சனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. இந்தப் பிரச்சனை தீர்வதற்கு நதிகளை இணைப்பதே தீர்வாக அமையும். காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை சந்திப்பது குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.