Skip to main content

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
ADMK legislators fast

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களைச் சந்திக்காதது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்