Skip to main content

ராஜேந்திரபாலாஜி எங்கே? தலைமறைவானது ஏன்? -பின்னணி தகவல்கள்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

ADMK LEADER RAJENDRA BALAJI POLIC INVESTIGATION

 

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வழக்கறிஞர் முத்துப்பாண்டி ஆகியோரிடம், அரசுத்துறை வேலை வாங்கித்தருவதற்காக, தான் பலரிடம் வசூலித்த ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல தவணைகளில் கொடுத்ததாகவும்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சாத்தூர் வந்தபோது நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும்   ரூ.1½ கோடி செலவு செய்ததாகவும், திருப்பித் தருவதாகச் சொன்ன அந்தப்  பணத்தையும் தராமல்,  மொத்தத்தில் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக, விஜய்நல்லதம்பி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவானது. விஜய்நல்லதம்பி மீதும் ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


உயர்நீதிமன்றத்தில் அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மோசடி வழக்கு மட்டுமல்ல, மதுரையில் கூலிப்படையைத் தங்கவைத்து, குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட அறிவிக்கப்படும் நபரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் வாதிட்டார். இந்த வழக்கில், ராஜேந்திரபாலாஜியின்  ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விருதுநகரில் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திவிட்டு, அவர் தலைமறைவானார். அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


இதனைத் தொடர்ந்து, ராஜேந்திரபாலாஜியின் அக்கா மகன்களான ரமணா, வசந்தகுமார் மற்றும் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் காவல்நிலையம் அழைத்துச்சென்று, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார், நள்ளிரவு கடந்தும் விசாரித்தனர். எஸ்.பி. மனோகரும் நேரடியாக விசாரணை நடத்தினார். 


‘அரசியல் வேறு; குடும்பம் வேறு. சம்பந்தமே இல்லாத உறவினர்களை காவல்நிலையத்தில் அடைத்துவைத்து விசாரிப்பதா?’ என்ற ஆதங்கத்துடன், ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை விடுவிக்கக்கோரி, முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், இன்பத்தமிழன் உள்ளிட்ட அதிமுகவினர், திருத்தங்கல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதிகாலை 04.00 மணிக்கு, தொடர் விசாரணைக்காக, மூவரையும் குற்றப்பிரிவு காவல்துறையினர்  போலீஸ் வேனில் விருதுநகர் அழைத்துச் சென்றனர். 


முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை, அவருடைய தோட்டத்தில் வைத்து  ‘ராஜேந்திரபாலாஜி எங்கே?’ என்று சுமார் 5 மணி நேரம், காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவருடைய இரண்டு போன்களையும் ‘ஸ்விட்ச்-ஆப்’ செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து, வரும் அழைப்புகளுக்கெல்லாம் பேச வைத்துள்ளனர். 


ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், நேரில் காட்டுவதாகவும் நம்மிடம் உறுதியளித்த விஜய்நல்லதம்பியிடம் இருந்து, இதுவரையிலும் நோ ரெஸ்பான்ஸ்!

 

‘ராஜேந்திரபாலாஜி ஏன் ஓடி ஒளிகிறார்?’ என்ற நமது கேள்விக்கு, அதிமுக வட்டாரத்தில் கிடைத்த பதில் இதோ, “கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்பதெல்லாம், விஜய்நல்லதம்பி அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை. யாரைக் கொலை செய்வதற்கு ராஜேந்திரபாலாஜி கூலிப்படையைத் தயார் செய்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறார் தெரியுமா? அவர்தான் ராஜவர்மன்! அந்த ராஜவர்மன் இப்போது,  ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை விடுவிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான அதிமுகவினரைத் திரட்டிவந்து, காவல்நிலையத்தை முற்றுகையிடுகிறார். அமைச்சராக இருக்கும் ஒருவர், எம்.எல்.ஏ. ஒருவரைக் கொலை செய்வதற்கு கூலிப்படையைத் தயார் செய்தார் என்பது, நம்பும்படியாகவா இருக்கிறது? அப்போது ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கு இடையே இருந்தது ஈகோ பிரச்சனை. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஈகோ-வை தூக்கி எறிந்துவிட்டு, அண்ணன், தம்பியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எதிரரசியல் செய்வதற்காக, ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக  அப்போது ராஜவர்மன் பேசிய பேச்சை, கொலைச்சதி  குற்றச்சாட்டாக யாரோ ஒருவர் (விஜய்நல்லதம்பி) இப்போது முன்வைப்பதும், அரசுத்தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டு வாதிட்டிருப்பதும், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. 

 

விஜய்நல்லதம்பியின் கடந்த கால மோசடி வழக்குகள் நாடறிந்தவை. பெரிய பெரிய அரசுத்துறை வேலைகளெல்லாம் வாங்கித்தருவதாகச் சொல்லி, போலியான மத்திய அரசு முத்திரையைப் பதித்து, பணம் வாங்கியவர்களிடம் அரசு வேலைக்கான ஆர்டர் தந்ததெல்லாம், திமுக அரசுக்குத் தெரியாததல்ல. அப்பேர்ப்பட்ட நல்லதம்பியிடம், கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட முடியுமா? முன்னாள் அமைச்சரின் பெயரை வழக்கில் சேர்த்தால், தன் மீதான வழக்கிலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிட்டே விஜய்நல்லதம்பி புகார் கொடுத்தது,  கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, உளவுத்துறையினரும் அறிந்த உண்மை. 

 

அதேநேரத்தில், ராஜேந்திரபாலாஜியை ‘மிஸ்டர் க்ளீன்’ என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், மந்திரி பதவியை வைத்து சொத்துகளைக் குவித்துவிட வேண்டுமென்று, மற்ற அமைச்சர்களைப் போல,  பணவெறி பிடித்துச் செயல்பட்டவர் அல்ல. மனைவி, மக்கள் என,  தனக்கென்று குடும்பம் இல்லாதவர் என்பதால், எந்த வழியில் பணம் வந்தாலும், அதனை கோவில் காரியங்களுக்கும், தன்னைத் தேடி வரும் எளிய மக்களுக்கும் வாரியிறைத்தார்.

 

இன்னொரு விவகாரம் கலைஞர் குடும்பத்தினரை, குறிப்பாக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தேர்தலுக்கு முன்பாக  அவர் மட்டமாக விமர்சித்ததுதான். அந்தக் காலக்கட்டத்தில், அப்பழுக்கற்ற பெருந்தலைவரை கலைஞர் விமர்சிக்கவில்லையா? அதெல்லாம் அரசியல் மேடைகளில் சகஜம். சொத்துகள் குவித்த அதிமுக அமைச்சர்களோடு ஒப்பிடும்போது, அளவில் ராஜேந்திரபாலாஜி வெறும் சுண்டைக்காய். ஆனாலும், கட்சியினரை திருப்திப்படுத்த வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுக்கு அறவே ஆகாத கலைஞர் குடும்பத்தைக் கடுமையாக விமர்சிப்பதுதான் சரியென்று, அதைச் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் தேவையற்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுமென்று,   மற்ற அதிமுக அமைச்சர்களெல்லாம் அடக்கி வாசித்தபோது, ராஜேந்திரபாலாஜி மட்டும் வெள்ளந்தியாக, இஷ்டத்துக்கு கடும் சொற்களை வீசினார்.  ஆனாலும், மு.க.ஸ்டாலினை விமர்சித்தது தவறு என்பதை உணர்ந்து,  அறிக்கை வாயிலாக வருத்தமும் தெரிவித்தார். 
அதிமுக அரசியலைப் பொறுத்தமட்டிலும், ராஜேந்திரபாலாஜியை ஒரு சுயநல அரசியல்வாதி என்று உறுதியாகச் சொல்லமுடியும். விருதுநகர் மாவட்டத்தில், தன்னைக் காட்டிலும் இன்னொருவர்  தலையெடுத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். இத்தகைய அரசியல் கணக்கை, ராஜேந்திரபாலாஜி கற்றுக்கொண்டது, அவருடைய அரசியல் ஆசான் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் இருந்துதான். ராஜேந்திரபாலாஜியின் வீழ்ச்சிக்கும், இதுவே காரணம். இத்தகைய சுயநலம், அனைத்துக் கட்சிகளிலும், அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோரிடம் உள்ளது. 

 

கட்சியினருக்கும், முன்பின் தெரியாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் கூட, பணத்தை பணமென்று பாராமல் அள்ளிவிடும் ராஜேந்திரபாலாஜி, வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி கைநீட்டி வாங்கிய பணத்தை, திருப்பித்தராமல் மோசடி செய்தார் என்பது, கொடுமையான குற்றச்சாட்டு. ஒருவேளை பணம் வாங்கியிருந்தால், ‘உன் பணம் யாருக்கு வேண்டும்?’ என்று, புகாராவதற்கு முன்பாகவே தூக்கியெறிந்திருப்பார். திட்டமிட்டே வழக்கில் சேர்த்த,  செய்யாத குற்றத்துக்கு எதற்காகச் சிறைபுக வேண்டும்? என்ற ஆதங்கத்தினால்தான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, முன்ஜாமீன் பெறும்வரை போலீஸ் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்ற வேகத்தில் மாயமாகிவிட்டார். 

 

விஜய்நல்லதம்பி கொடுத்த மோசடி புகாரில், தனிப்படை போலீசார் வலை வீசித்தேட, தலைமறைவாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி என்பதே உண்மை!” என்றனர். 

 

‘மேலே இருப்போர், ராஜேந்திரபாலாஜியைக் காப்பாற்றுவரா? கைவிடுவரா?’ என்று, அவர் வழிபடும் தெய்வங்களையும், இந்த வழக்கிற்காக இழுக்கின்றனர், அக்கட்சியினர்!

 

சார்ந்த செய்திகள்