கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு குவிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேர் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எல்.இ.டி. விளக்கு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து கோவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் எஸ்.பி.வேலுமணியின் வீடு முன்பு குவிந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து முழக்கமிட்ட அ.தி.மு.க.வினரை அங்கிருந்து வெளியேறும் படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அங்கிருந்து யாரும் கலைந்து செல்லாததால், ஏழு எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று அ.தி.மு.க. நிர்வாகி சந்திரசேகர் வீடு முன்பும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு எதிராக முழக்கமிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடப்பதால், அங்கும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.