தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றன.
அதேபோல், கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமாருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.