தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்பி. சவுத்ரியின் மகனான இவர், ஈ, நண்பன், சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது வரலாறு முக்கியம், ஜெமினி கணேசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ஜீவா இன்று காலை சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக தன்னுடைய மனைவியுடன் தங்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த காரை ஜீவா ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் சென்ற கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மைகரம் கிராமத்தைக் கடந்துள்ளது. அதன்பிறகு, கனியாமூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது.. திடீரென அந்த சாலையின் குறுக்கே பைக்கு ஒன்று வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா அந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காகத் தனது காரை திசை திருப்பியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய மனைவி லேசான காயத்தோடு உயிர் தப்பி இருக்கின்றனர். நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கியது தெரிந்ததும் அந்த இடத்தில் கூட்டம் சேர்ந்து பரபரப்பாக காட்சியளித்தது.
அந்த நேரத்தில், கூட்டத்தில் இருந்த ஒருவர். விபத்து எப்படி நடந்தது என ஜீவாவிடம் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பொறுமையை இழந்த ஜீவா.. அந்த நபரை பார்த்து, "ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு.... என்ன பெரிய இது மாதிரி பேசிட்டு இருக்க...." என கோபமாகப் பேசினார். அதே போல், இந்த விபத்தில் ஜீவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து, அந்த காரில் சேலம் மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜீவாவிற்கு அடிபட்டு இருக்கிறது என்று தெரிந்ததும் அங்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூட தொடங்கி விட்டதால் ஜீவா அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பியிருக்கிறார். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் காரை மீட்டு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.