தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குவைத் நாட்டுக்கு சென்னையில் உள்ள அமோசா டிராவல்ஸ் சார்பாக வேலை கிடைப்பதாக சொல்லி ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து குவைத் சென்றுள்ளனர். இந்திய நாட்டின் மதிப்பீட்டில் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று சொல்லி இரண்டு ஆண்டு ஒப்பந்தம், தங்குமிடம் நிறுவனமே தரும் என சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைத்துள்ளது. சாப்பாடு உங்கள் சொந்த செலவில் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதில் 19 பேர் கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு வீட்டுக்கு 8 ஆயிரம், 9 ஆயிரம் என வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதையெல்லாம் கடந்து மீண்டும் ஒன்றரை லட்சம் கட்டி ரினிவெல் செய்ய வேண்டும் என சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகே அங்குள்ள தூதரகத்திற்கும் காவல்துறைக்கும் அவர்கள் சென்றுள்ளனர். அதையும் கடந்து உங்கள் நாட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னால் பாஸ்போர்ட் தேவை என்று சொன்னால் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என சொல்லியுள்ளார்கள். இந்த தகவல் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டு அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'குவைத்தில் தமிழக இளைஞர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விளக்கி, அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்களை மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.