Skip to main content

மாணவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய அரசுப் பள்ளி மாணவி

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க.கண்ணன் மகள் பொற்செல்வி (9). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாய் கிழமை தனது பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவி பொற்செல்வி பள்ளி தலைமை ஆசிரியை பூமொழியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் சக மாணவ, மாணவிகள் சுமார் 95 பேருக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் கைதட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.

 

s


    இதே போல சேந்தன்குடி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பு நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு கொடுத்த சம்பவமும உண்டும். அதே போல கடந்த ஆண்டுகளில் பல மாணவ, மாணவிகள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி உள்ளனர்.

 

s


    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பூமொழி கூறும் போது.. தொடர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவேண்டும் என்று மாணவி பொற்செல்வியின் தாத்தா மரம் தங்கசாமி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து மரக்கன்றுகளை நடவு செய்து வந்தார்.

 

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் மரக்கன்று நட்ட பிறகே விழா தொடங்கும். அதே போல தான் இப்போது வரை நடைமுறையில் உள்ளது. மேலும் தமிழக அரசும் மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகள் வளர்ப்பதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. அதனால் தான் பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகளை வழங்குவதை அனுமதித்துள்ளோம். எங்கள் மாணவர்கள் பரிசாக பெற்ற மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள் என்றார்.

 

சார்ந்த செய்திகள்