Skip to main content

கல்குவாரி ஏலத்தில் மோதல்; முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Action taken by the Chief Minister for Perambalur issue

 

பெரம்பலூரில் கல்குவாரி ஏலத்தில் அரசு அதிகாரிகளை தாக்கிய திமுகவினர் 13 பேரை போலீஸார் அதிரடி கைது செய்தனர். 

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரிகளை ஏலம் விடப்போவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தது. அதன் படி, கடந்த மாதம் 30ஆம் தேதி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

 

அந்த வகையில், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வன் (48), பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது அங்கிருந்த திமுகவினர் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி கலைச்செல்வன் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டார். அப்போது, திமுகவினர் அவர் வைத்திருந்த விண்ணப்பத்தை கிழித்து அவர்களை தாக்கியதாகக் கூறப்பட்டது. 

 

மேலும், ஏலம் விடும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உட்பட அனைவரையும் திமுகவினர் தாக்கியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

 

இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எந்தவித பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாமளா தேவிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த 13 பேரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்