சிதம்பரத்தில் பள்ளியில் மாணவர் மீது அமிலம் பட்ட சம்பவம் தொடர்பாக கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வியாழன் மாலை பள்ளி ஆய்வகத்தில் அமர்ந்திருந்த 12 ஆம் வகுப்பு பயின்று வந்த அப்துல் ஹமீது என்ற மாணவனின் காலில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதனை அவரது கைக்குட்டையால் துடைத்து நுகர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அதை கழுவிவிட்டு வகுப்பறையில் அமர்ந்து இரண்டு பாடவேளை வகுப்பை கவனித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற அவர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததால் ஆபத்தான நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சனிக்கிழமை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் லட்சுமி ராமன் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பள்ளியில் அமிலம் பட்டு மாணவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதா? அல்லது மாணவரின் வீட்டின் அருகே உள்ள கவரிங் நகை செய்யும் நகை பட்டறையிலிருந்து சயனைடு உள்ளிட்ட அமிலப் பொருட்கள் ஏதாவது நுகர்ந்ததால் ஏற்பட்டுள்ளதா? வியாழன் மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு சென்ற மாணவர் எலுமிச்சை ஜூஸ் அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து ஆய்வு அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்று கூறுகின்றனர்.