
ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியதாகச் சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து ஆவின் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையைக் கருத்தில் கொண்டும், பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களைச் சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.
மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்யத் தொடங்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.