Skip to main content

“காலை 8.45 மணிக்கெல்லாம் யாரும் குடும்பத்திலிருந்து படம் பார்க்கப் போவதில்லை” - அமைச்சர் ரகுபதி பேட்டி

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

"At 8.45 in the morning no one from the family is going to watch a movie" - Minister Raghupathi interview

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் லியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள், சென்னையில் உள்ள உள்துறைச் செயலாளர் அமுதாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்திற்கு காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு 'செவன் ஸ்க்ரீன்' பட நிறுவன வழக்கறிஞர்கள் வேலூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உள்துறைச் செயலாளர் அமுதாவை சந்தித்திருந்தனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் கொடுப்பதுதான் சிறப்புக் காட்சி. சிறப்புக் காட்சிக்குத் தமிழக அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. காலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி வேண்டும் எனக் கேட்டார்கள். ஆனால் காலை 9 மணி முதல் இரவு 1:30 வரைக்கும் நீங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவை தந்திருக்கிறது நீதிமன்றம்.

 

4 மணிக்கு சிறப்புக் காட்சி நடத்தலாம் என உத்தரவிட்டால் நடத்த வேண்டியதுதான். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். தீபாவளி போன்ற நேரங்களில் ஆறு சிறப்புக் காட்சிகள் கொடுக்கிறார்கள். ஆறு சிறப்புக் காட்சிகளுக்கு 18 மணி நேரம் குறைந்தபட்சம் வேண்டும். ஒருவேளை படம் 3 மணி நேரமாக இருந்தால் இன்னும் கூடுதல் நேரமாகலாம். ஆறு சிறப்புக் காட்சிகள் கொடுப்பவர்கள் முன்னாடியே ஆரம்பிக்க வேண்டும். ஐந்து சிறப்புக் காட்சிகள் என்றபோது 9 மணியிலிருந்து இரவு ஒன்றரை மணி வரை கிட்டத்தட்ட 15 மணி நேரம் கொடுத்திருக்கிறார்கள்.

 

காலை 8.45 மணிக்கெல்லாம் யாரும் குடும்பத்திலிருந்து படம் பார்க்கப் போவதில்லை. ரசிகர்கள் தான் பார்ப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை அதில் மாற்றுக் கருத்து கிடையாது. எங்களைப் பொறுத்தவரை சினிமாவில் எந்தவிதமான தடைகளும் போட்டு திரை உலகத்திற்கு எந்த விதமான எதிர்ப்பையும் நாங்கள் பெற்றுக் கொள்பவர்கள் கிடையாது. திரையுலகம் என்பது எங்கள் நட்பு உலகம். எனவே திரை உலகத்தோடு நாங்கள் நெருங்கிய நட்பாக தானே இருப்போமே தவிர அவர்களுடைய விரோதத்தை நாங்கள் எப்பொழுதுமே சம்பாதித்துக் கொள்ள விரும்பமாட்டோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்