திண்டுக்கல் உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்துள்ளது. திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி பெற வேண்டும். கள்ளக்குறிச்சி, விருதுநகர், ஊட்டி கல்லூரிகளில் 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்களை ஒதுக்க வேண்டும் என தேசிய மருத்துவ கழகத்திடம் வலியுறுத்திவருகிறோம்.
திண்டுக்கல் உட்பட 4 இடங்களில் கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. அதே சமயம் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கரோனா மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் டெங்கு பெரிய தாக்கம் இல்லை. தற்போது 340 பேர் சிகிச்சை பெறுகின்றனர்” என்று கூறினார்.