தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (7.05.2021) பதவியேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து பல துறையைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் மு.க.ஸ்டாலினுக்கு 67 சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் உட்பட 67 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி மத்திய சட்டங்களில் இல்லாத தகுந்த சூழலியல் மேற்பார்வையைக் கொண்டு வர வேண்டும். வேதாந்தா காப்பர் ஆலையை திறக்கக்கூடாது.
அந்த கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு குற்றவியல் வழக்குகள் தொடரப்பட வேண்டும். சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர்-தச்சூர் 6 வழிச்சாலை திட்டம் மற்றும் கூடங்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் நான்கு அனு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். வேடந்தாங்கல் சரணாலயத்தில் எல்லை குறைப்பு மற்றும் பழவேற்காடு சரணாலயத்தில் பாதுகாப்புக்கு உட்பட்ட இடைப்பகுதியைக் குறைப்பதற்கு முந்தைய அரசின் கோரிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்துஸ்தான் யூனிலெவரின் பாதரச கழிவுகள் கொண்ட கொடைக்கானல் தொழிற்சாலை பகுதி சர்வதேச தரநிலைகளை பின்பற்றி தூய்மைப்படுத்தப்பட வேண்டும். மரபணு மாற்று விதைகளை அனுமதிக்காதீர். டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதி மொழியை வலிமைப்படுத்துதல். அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோ கார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கம், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் சூழலியல் நீதிக்கான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கு நிலையிலும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக எங்கள் கண்காணிப்பு பணிகளை தொடருவோம்” எனப் பல்வேறு சூற்றுச்சூழலுக்கு சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டுகோள் வைத்துக் கடிதம் அனுப்பியுள்ளனர்.