கள்ளக்குறிச்சியில் இடி மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயது முனியம்மாள். இவர் தனது வீட்டுக்கு வெளியில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அந்த இடி முனியம்மாள் மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் முனியம்மாளை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சின்ன சேலம் அருகில் உள்ள பெத்தானூர் கிராமப் பகுதியில் வசிப்பவர் பெரியம்மாள்(37). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி உமா(35) ஆகிய இருவரும் தங்கள் ஊரைச் சேர்ந்த சிலருடன் பக்கத்து ஊரான கருங்குழி கிராமத்தில் நெல் நடவு செய்யும் பணிக்குச் சென்றுள்ளனர். நடவுப் பணி செய்து கொண்டிருந்தபோது மதியம் ஒரு மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் விழுந்த இடி பெரியம்மாள், உமா ஆகிய இருவரையும் தாக்கியது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர். பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள அம்மக்களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் வட்டாட்சியர் இந்திரா வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிகளுக்குச் சென்று மூவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் மூன்று பெண்கள் இடி மின்னல் தாக்கி திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.