சேலத்தில், அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதல் பரப்பளவில் குவாரிகள் அமைத்து, 21 கோடி ரூபாய் மதிப்பிலான கல், மணல் வெட்டி கடத்திய முன்னாள் குவாரி அதிபர்கள் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி காசி நகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர், அதே ஊரில் கடந்த 2009 முதல் 2019ம் ஆண்டு வரை கல்குவாரி ஏலம் எடுத்து நடத்தி வந்தார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரும், மாசிநாயக்கன்பட்டியில் கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை கல்குவாரியை ஏலம் எடுத்து நடத்தி வந்தார்.
இந்த குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக மண், கற்களை வெட்டி எடுத்துள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் அளவீடு செய்யப்பட்டது.
இதையடுத்து மாசிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பிரசாந்த், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், காசி விஸ்வநாதன் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சட்டத்திற்குப் புறம்பாக 5.53 கோடி ரூபாய் மதிப்பிலான கல், மணல் உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்துள்ளார்.
அதேபோல், செல்வகுமார் என்பவரும் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், கூடுதலாக 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குவாரி அமைத்து 15.50 கோடி ரூபாய்க்கு கற்களை வெட்டி கடத்தியுள்ளார். இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கணேசன், முன்னாள் குவாரி அதிபர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, குவாரி ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில் பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் யார் யார்? அவர்களுக்கு குவாரியில் நடந்து வரும் விதிமீறல்கள் பற்றி தெரியுமா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.