Skip to main content

200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது

அடமானம் வைத்து மீட்கமுடியாமல் போன நிலங்களை வாங்கி விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.200 கோடிக்கு மேலாக  மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நோராமேரி. தபால் துறை பணியாளர். இவருக்கு, சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஜய் மற்றும்  அயப்பாக்கத்தை சேர்ந்த ஹேமமாலினி ஆகிய இருவரும், கடந்த 2014ல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகினர். அப்போது வில்லங்கத்தில் உள்ள இடங்கள், வங்கிகளில் அடகு வைத்து மீட்க முடியாமல் போன இடங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கிறோம் என நோராமேரியிடம் தெரிவித்துள்ளனர். நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளனர். 

மேலும், தாங்கள் செய்யும் இந்த தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் விரைவில் பல கோடிகளுக்கு அதிபதியாகலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய நோராமேரி தன்னிடம் இருந்த ரூ.29.5 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி லாபத்தையும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நோராமேரி புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் விஜய், ஹேமமாலினி இருவரையும் நேற்று கைது செய்தனர். கைதான விஜய்,  ஹேமமாலினி இருவரும் சேர்ந்து இதே போல் நாடு முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2013ல் பண மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். மேலும் இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்