தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வேனை விட்டு இறங்கிய ஒன்றாம் வகுப்பு சிறுவன் மணல் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவளமங்கலம் முதன்மைச் சாலையில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. விவசாயியான இவருடைய மகன் கவிபாலன்(5). திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இன்று மாலையில் வழக்கம்போல பள்ளி வேனில் இருந்து இறங்கிய கவிபாலன் சாலையைக் கடந்து எதிரே உள்ள வீட்டுக்குச் செல்ல முயன்றுள்ளான். அப்பொழுது மருவூரில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஏற்கனவே இந்தப் பகுதியில் மணல் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து லாரி சிறை பிடிக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.