கோவை சுண்டக்காமுத்தூர் அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஃபேக்டரியில் வேலை செய்யும் செல்வராஜ் மைத்துனர் விக்னேஷ் என்பவரும், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளர் சங்கர் என்பவரும் கூட்டாக இணைந்து ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி 1,130 மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்திருந்தனர்.
அதோடு, சட்டவிரோதமாக கள்ளத்தனமாக விற்பனை செய்துவந்ததாக குனியமுத்தூர் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். அங்கு சாதாரணமாக மதுபாட்டில்கள் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
காவல்துறை விசாரணையில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும், அதைக் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த ஃபேக்டரியில் பதுக்கிவைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை குனியமுத்தூர் போலீசார் தேடிவருகின்றனர்.