நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால் தாக்கியதில் தமிழ்நாடு மீனவர்கள் சின்னதம்பி, அவரது மகன்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 மீனவர்களும் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆறுதல் கூறி, உரியச் சிகிச்சை தர மருத்துவர்களை அறிவுறுத்தினார். தொடரும் இலங்கை மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்து ஆற்காட்டுத்துறை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மீனவர்களைத் தாக்கி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.