ரஜினியின் தீவிர ரசிகராக 10 ரூபாய் சாப்பாடு வழங்கும் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘அம்மா’ உணவகம் தொடங்க ஆலோசகருமாக இருந்தவரும் பிரபல சித்தமருத்துவருமான டாக்டர் வீரபாபு.
சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் உழைப்பாளிகளுக்காக மிகக்குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவகத்தை கட்டிடவேலை செய்யும் பெண்மணியை வைத்தே திறந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் டாக்டர் வீரபாபு. துணை ஆணையர் பிரபாகர், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ரஜினி ரசிகர் மன்றத்தினர் என பலரும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிக்கொண்டிருந்த ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு கொடுத்து பல்வேறு உயிர்களை காப்பாற்றக் காரணமாக இருந்தவர் டாக்டர் வீரபாபு. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல்வேறு நோய்களுக்கு சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே ‘வேரும் தழையும்’ என்கிற பெயரில் சித்த மருத்துவமனை ஆரம்பித்து தமிழ்மருத்துவத்தின்மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்திவருகிறார்.
தற்போது, 2019 டிசம்பர்-12 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் சூழலில், ரஜினியின் தீவிர ரசிகரான டாக்டர் வீரபாபு, ஏழை எளிய மக்கள் சாப்பிடும் விதமாக சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் 10 ரூபாய் உணவகத்தை ஆரம்பிக்கிறார். இந்த உணவகத்திற்கு, ரஜினி நடித்த ‘உழைப்பாளி’ என்ற தலைப்பையே பெயராக சூட்டியிருக்கிறார்.
70 ரூபாய்க்கு குறைந்து, உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு ஹோட்டல்கள் சென்னையில் இல்லை. கையேந்திபவனில்கூட 50 ரூபாய்க்கு குறைவாக சாப்பாடு விற்கப்படவில்லை. ஆனால், உணவகத்தின் வாடகை, மளிகைப்பொருட்கள் என பல்வேறு செலவுகள் உள்ளன. அப்படியிருக்க, 10 ரூபாய்க்கு எப்படி சாப்பாடு போடமுடியும்? என்று நாம் கேட்டபோது, “ஏற்கனவே, சென்னை மாநகராட்சி வளாகத்துக்குள் கடந்த 7 வருடங்களுக்குமேலாக 15 ரூபாய்க்கு சாப்பாடு மற்றும் பல்வேறு பாரம்பர்யமிக்க ஆரோக்கியம் நிறைந்த பதார்த்தங்களை மிகவும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவந்தேன். இதனால், ஒருநாளைக்கு 1,000 பேர் பயன்பெற்றார்கள். இனி, அதைவிட அதிகமான ஏழை எளிய உழைப்பாளிகள், தொழிலாளிகள் பயன்பெறுவார்கள். நான், ரஜினியின் தீவிர ரசிகன். ஒரு சாதாரண ரசிகனாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய இருக்கிறேன். அதன், முதல்கட்டம்தான் உழைப்பாளி உணவகம்.
இதுகுறித்து, தலைவரின் உதவியாளர்களிடம் அனுமதி கேட்டபோது, ‘ஏழைங்க வயிறார சாப்பிடுற நல்ல விஷயத்தைதானே செய்றீங்க. தாரளமா செய்ங்க’ என்று உற்சாகமூட்டினார்கள். தற்போது, தொடங்கியிருக்கிறேன். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 30 ரூபாயில் சாப்பாடும் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்ல, திணை எள்ளுருண்டை, வாழை இலை கொழுக்கட்டை, கேழ்வரகு புட்டு, திணை அல்வா, சோளப்பணியாரம், வல்லாரை- முடக்கத்தான்- கம்பு-சோளம்- கேழ்வரகு தோசை இவையெல்லாம் 10 ரூபாய்தான். இதுபோக, தூதுவளை, வல்லாரை, முடவட்டுக்கால் போன்ற ஆரோக்கிய நிறைந்த மூலிகை சூப்கள் 10 ரூபாய் என விலை குறைவாகவும் ஆரோக்கியமான உணவமாகவும் இருக்கும்”என்கிறார் உற்சாகமாக.
மணப்பக்கம் பகுதியில் மட்டுமல்ல, சுற்றியுள்ள அத்தனை ஏரியாக்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது உழைப்பாளி உணவகம். ரஜினி ரசிகர்போல மற்றவர்களும் இதை ஃபாலோ-அப் செய்யலேமே!