
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி, பொங்கல் மற்றும் அவரது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது தனது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சித் தொண்டர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், கடைசியாக அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருகை தந்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரைப் பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில், விஜயகாந்த்தைப் பார்த்ததும் கேப்டன் கேப்டன் எனக் கோஷம் எழுப்பினர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் தேமுதிக சார்பில் கலந்து கொள்வோம். யார் கலந்து கொள்ளப்போகிறார் என்பதை கட்சி விரைவில் அறிவிக்கும். அதன் நிறை குறைகளைக் கண்டறிந்து விவாதித்து மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருந்தால் வரவேற்போம் இல்லையெனில் எதிர்ப்போம்.
உட்கட்சித் தேர்தல் முடியும் தறுவாயில் உள்ளது. செயற்குழு பொதுக்குழு விரைவில் விஜயகாந்த்தால் அறிவிக்கப்படும். தேமுதிகவை பொறுத்தவரை விஜய்காந்த்தான் என்றும் தலைவர். விஜயகாந்த் பேசுவதிலும் நடப்பதிலும் சிரமம் உள்ளது. அதை மறுக்கவில்லை. ஆனால் தொண்டர்களைச் சந்திக்க விரும்பியது விஜயகாந்த் தான். இதுபோன்ற முக்கியமான நிகழ்வுகளில் விஜயகாந்த் தொடர்ந்து கலந்து கொள்வார்” எனக் கூறினார்.