டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் ரொம்ப நல்லவர் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கட்சிக்கு அவப்பெயராக நினைக்கிறீர்களா?
பெண்கள் விசயத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக இருப்பார். அந்த விசயத்தில் என்றைக்கும் சமாதானம் ஆக மாட்டார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கிட்டு இந்த மாதிரி செயல் நடந்திருக்கிறது. ஜெயக்குமாரோடு இது முடியவில்லை. சில விசயங்கள் வெளியே வந்தால் அசிங்கமாய்விடும்.
ஜெயக்குமார் தவிர வேறு சிலரும் இருக்கிறார்களா?
இருக்கிறார்கள்.
யார் யார் என்று சொல்ல முடியுமா?
அது சொல்ல முடியாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களை திருத்திக்கொண்டால் சரி. என்னிடம் வேறு ஆடியோ இருக்கிறது.
அந்த ஆடியோவை வைத்து ஜெயக்குமாரை மிரட்டுகிறீர்களா?
நான் ஏன் மிரட்டுகிறேன். எனக்கும் அவருக்கும் சொத்து பிரச்சனையா இருக்கிறது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குரல் கொடுப்பது தவறா. நீங்கள் கொடுக்க மாட்டீர்களா. நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலம் செல்வதாக விசயத்தை பெரியதாக்கினார்கள். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டான இந்த பெண் விசயத்தை ஏன் பெரியதாக்கவில்லை. எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு.
பாதிக்கப்பட்ட பெண் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்களா?
என் பாதுகாப்பில் இல்லை.
ஜெயக்குமாரால் அந்த பெண் பாதிக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் அவர், இதன் பின்புலத்தில் நீங்கள் இருப்பதாக கூறுகிறாரே?
சொல்லட்டும். உண்மையை சொல்லட்டும். அதைவிட்டுவிட்டு ஏன் எங்கள் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பெயரை இழுப்பது ஏன். மாபியா கும்பல் என்கிறார். இப்போது அவர் மாமியார் கும்பலில் மாட்டிக்கிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்கள் குடும்பமும் உங்களை அணுகினார்களா?
அதையெல்லாம் தேவைப்படும்போது சொல்வோம். தேவைப்படும்போது ஆதாரங்களோடு வெளிவரும். இல்லாததை நான் சொல்ல மாட்டேன். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தோம். இப்போது அது சிபிஐ வரை சென்றதா இல்லையா.
அந்த பெண் குடும்பத்தினரின் சம்மதத்தோடுதான் ஆடியோவை வெளியிட்டீர்களா?
நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை. யார் இந்த ஆடியோவை வெளியிட்டார்கள் என்று எனக்கு தெரியாது. அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.
ஏற்கனவே அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சமயத்தில் இந்த மாதிரியான குற்றச்சாட்டு....
அது வேறு விசயம். இது பெண் பாதிக்கப்பட்ட விசயம். இந்த மாதிரியான விசயத்திற்கு பதவியில் இருந்து விலகிவிட்டுதான் விசாரணை நடத்த வேண்டும். குரல் தன்னுடையது இல்லை என்று சொன்னார், குழந்தை தன்னுடையது இல்லை என்று சொன்னாரா?
இவ்வாறு கூறினார்.