கரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில் தற்போது தொடங்கிய ஏப்ரல்-1 முதல் அடுத்த ஒரு வருடத்திற்குப் பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் சம்பளங்களில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் ரூ.7900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறும் போது, எம்.பி-க்கள் தொகுதி நிதியில் கைவைப்பது முறையானது அல்ல, ஜனநாயக நடைமுறைகளுக்கு இது எதிரானது என்று கூறினார்.இந்த அவசரச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், தொகுதி மேம்பாட்டு நிதி என்பது ஒரு தொகுதியில் உள்ள மக்களின் நலனுக்காகச் செலவு செய்வது ஆகும்,இதனை நிறுத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகம் மட்டுமின்றி,ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார்.