கேரளாவில் உள்ளது போல் தொகுப்பு இட ஒதுக்கீடு முறை வேண்டும் என பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசும் உறுதியாக இருக்கிறது. கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காலம் தாழ்த்தக்கூடாது. ஆறு மாதக் காலக் கெடு என்று சொல்கிறார்கள். 6 மாதக் காலக்கெடு நீட்டிக்கப்படக்கூடாது. ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் வேண்டும். அதே போன்றுதான் இன்று தொகுப்பு இட ஒதுக்கீடு முறை நாடார் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் நான்கு நாட்களுக்கு முன்னால் பேசினேன். கேரளாவில் பல தொகுப்பாக பிரித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கொண்டு வரும் வகையில் தொகுப்பு ஒதுக்கீடு முறையைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்றார்.