
திண்டுக்கல்லில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தொழிலாளர் நலவாரியத் துறை அமைச்சர் கணேசன், “தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் பதிமூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். அது போல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற ஒரே அமைச்சர் சக்கரபாணி தான். திண்டுக்கல் மாவட்டத்திற்கும் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். அந்த அளவுக்கு எல்லா துறை அமைச்சர்களையும் சந்தித்து காரியம் சாதித்து விடுவார்.
தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வந்ததின் மூலம் தற்பொழுது பணிகள் செய்ய கூட இடமில்லை. தமிழக முதல்வருக்கு மிகவும் நெருக்கமாகவும் அவருடைய இதயத்திலும் அமைச்சர் சக்கரபாணி இடம் பிடித்திருக்கிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விஷயத்தை செய்ய சொன்னால் அதை முழுமையாக செய்து முதல்வரிடம் பாராட்டையும் பெறக் கூடியவராக இருந்து வருகிறார். தொகுதி மக்கள் மனதில் நிரந்தரமாகவே அமைச்சர் சக்கரபாணி இடம் பிடித்திருக்கிறார். தொடர்ந்து மக்களுக்காகவே உழைத்தும் வருகிறார்” என்று கூறினார்.