நடரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு அதிமுக பிரமுகர் ரகளையில் ஈடுபட்டதால், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், வத்தலக்குண்டு-பெரியகுளம் மெயின்ரோட்டில் பைக், கார், பேருந்து உள்பட வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் தேவதானப்பட்டி வீருநாகம்மாள் கோவில் அருகே குடிபோதையில் 2 பேர் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. அவர்களை பலர் ஓரமாக போங்க என்று சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீது மோதாமல் இருக்க வாகனங்களை ஓரமாக ஓட்டிச் சென்றனர்.
இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் நிலை ஏற்பட்டது. இதனால் சில வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் கண்டித்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக சென்றவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். வாகனங்களில் சென்ற சிலர், இவர்கள் இரண்டு பேரும் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிடும் காட்சிகளை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.
இதுதொடர்பாக தேவதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பெருமாள் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்திருந்த அவர்களை அப்புறப்படுத்த முயன்ற தங்கேஸ்வரன் என்பவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
இது குறித்து தங்கேஸ்வரன் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் பேரில் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மற்றொரு நபரான சுரேஷ் என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.