கரூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செய்வதாக பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். மேலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டுவதாகவும் மோடி தெரிவித்து இருப்பது எங்களின் வலிமையையே காட்டுகிறது.
வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் 21 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இடைத்தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 4 முனைபோட்டி இருந்தது. தற்போது இருமுனைப் போட்டி உள்ளதால் கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளதால் வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. எங்களுக்கு உதவி செய்ததாக பிரேமலதா கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தார்.