Skip to main content

“பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி” - கே.பி.ராமலிங்கம் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
BJp Alliance is in leadership KP Ramalingam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூட்டணி குறித்து தெரிவிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இனி மாநிலக் கட்சிகள் தலைமையில் கூட்டணி இல்லை. இங்குள்ள மாநில கட்சிகள்தான் தேசிய கட்சிகளின் மீது ஏறி சவாரி செய்கின்றன. அங்கு எவ்வளவு சீட்?; இங்கு எவ்வளவு சீட்? என ஒரு சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்து விட்டு வரட்டும். பிரதமர் மோடி தலைமையை ஏற்றால் கூட்டணி குறித்து பேசுவோம்.  பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் போட்டியிட வைத்து அங்கீகாரம் பெற்றுத்தரும் இடத்தில் பாஜக இல்லை. அடுத்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர பாஜக உழைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக வேட்பாளர் மரணம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
BJP candidate Kunwar Sarvesh Kuma news

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் (வயது 72) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மொராதாபாத் தொகுதிக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. குன்வர் சர்வேஸ் உள்ளிட்ட 12 பேர் மொராதாபாத் தொகுதியில் வேட்பாளர்களாக களம் கண்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குன்வர் சர்வேஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இவர் இருந்துள்ளார்.  இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குன்வர் சர்வேஸ் குமார் மறைவுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். 

Next Story

‘மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு’ - தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Repolling in Manipur Election Commission action

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு நாளை மறுநாள் (26.04.2024) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது.

இத்தகைய  சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்வம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்  நிகழ்ந்தன.

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு  நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.