தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தன. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்ப மனு அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 1984 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின், 9 வது முறையாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தற்போது விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 2011 மற்றும் 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.