2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், கூட்டத் தொடரில் மூன்றாவது நாளான இன்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “ஆளுநர் பேசும்போது முதல்வரைப் பேச அனுமதித்திருக்கக் கூடாது” என்றார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் என் அனுமதி பெற்ற பின்புதான் பேசினார். சட்டப்பேரவை விதி 286ன் படி சூழலைப் பொறுத்து பேரவைத்தலைவர் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் உண்டு. அதன் அடிப்படையிலேயே முதல்வருக்குப் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது” என்றார்.