Skip to main content

பேனா நினைவுச் சின்னத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் - சீமான் அறிவிப்பு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

Seeman announced that he will take legal action against setting up a pen memorial

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது.  இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமெனவும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. 

 

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது. மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனை எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்