சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அவர் கோயம்பேடு வழியாக காரில் வரும்போது, பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டிருந்து வரவேற்றனர். இதனால் பூந்தமல்லி சாலை சில மணி நேரம் ஸ்தம்பித்தது. போக்குவரத்து திணறியது. காரில் நின்றபடியே கைகளை அசைத்தபடியே மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார் ரஜினிகாந்த்.
பின்னர் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்த பின்னர் மேடையில் பேசியபோது, ‘’வரும் வழியில் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக கட்-அவுட், பேனர்கள் வைத்திருப்பதை பார்த்தேன். அப்படி பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்க வேண்டும். ரசிகர்கள் யாரும் இனிமேல் சட்டத்தை மீற வேண்டாம். இடையூறுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.