நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையடினார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இத்தொகுதியில் சிபிஐ சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் கேரள மாநிலத் தலைவர் கே சுரேந்திரனும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளது கவனிக்கத்தக்கது.