தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அது குறித்து புத்தகம் வெளியிட்டு, அதன் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அதில் 'உங்களை அங்கே விரட்டுகிறார்கள். நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இன்று சொல்கிறேன், தமிழ் நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது” எனக் கூறியிருந்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழனுடைய பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், பயன்பாட்டுக்கும் உகந்த சொல் அல்ல அவர்கள் சொல்வது. இதில் என்ன வேடிக்கை என்றால் இலக்கிய செல்வராக திகழ்ந்த குமரி அனந்தனின் மகள் இப்படி பேசுவது அநாகரீகமான செயல்'' என்றார்.
வடகிழக்கு பருவமழை செயல்பாடுகள் விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகரில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் திண்டிவன நகராட்சியில் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ''எல்லா இடத்திலும் அந்த பணிகள் நடைபெறுகிறது. திண்டிவனம் நகரத்தை நீங்கள் சுற்றிப் பாருங்கள். காலையில் கூட நான் செஞ்சி பேருந்து நிலையம் வழியாக வரும் பொழுது அந்த பணிகள் நடைபெற்று வருவதை சென்று நான் பார்த்துவிட்டு தான் வந்தேன். ஒன்று இரண்டு இடங்களில் பணியில் நடக்கவில்லை என்றால் துரிதமாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி, புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சார் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார் என்பதுதான் செய்தி'' என்றார்.