கரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ததையொட்டி, இந்த ஆண்டு தமது பிறந்த நாளை (19-06-2020) கொண்டாடப் போவதில்லை என காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மறுத்து விட்டார்.
இதனையொட்டி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், "சீன ராணுவத் தாக்குதலில் உயிர்நீத்த நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஏழைகளுக்கு உணவு வழங்குமாறும், சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் வலியுடனும், இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் இருக்கும் போது, அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். கேக் வெட்டுவது, கோஷம் எழுப்புவது, பேனர்கள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார் ராகுல்காந்தி.
இதனை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் வலியுறுத்தியுள்ளார் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால்.
இதனையடுத்து, "ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடுகிற வகையில் மரக்கன்றுகளை நடுவது, விதை நெல் வழங்குவது ஆகியவற்றைச் செய்வதோடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்" என மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.