அதிமுக ஓபிஎஸ் தரப்பு சார்பில் ஈபிஎஸ் தரப்பிற்காக ஐந்து பிரார்த்தனைகள் செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பின் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். நேற்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் புகழேந்தி மற்றும் மருது அழகுராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “துரோகிகளோடும் ஊமைகளோடும் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதன் வெளிப்பாடுதான் சி.வி.சண்முகம் பேசுவது. சி.வி.சண்முகம் இவ்வளவு மோசமாகப் பேசிய பின்பும் அண்ணாமலை நியாயமாக நடந்து கொண்டு நேரான பார்வையோடு நல்ல முடிவை எட்டவேண்டும்.
யார் மன்னிப்பு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம். சி.வி.சண்முகம் நிதானத்துடன் வந்து மன்னிப்பு கொடுக்க வேண்டும். ஜெயக்குமாருக்கு இங்கு இடமில்லை. அதை ஒத்துக்கொள்ள மாட்டோம் எந்தக் காலத்திலும்” எனக் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “நாளைய கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும் என அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக நாங்கள் பிரார்த்தனை செய்வோம். அவர் பேசுவதை நிறுத்திவிட்டாலே கட்சிக்கு நல்லது நடந்துவிடும். பாஜகவால் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. பழனிசாமியால் தான் அதிமுகவிற்கு பின்னடைவு. பழனிசாமி தன்னை திருத்திக்கொண்டு கடிதம் கொடுத்தால் அவர் அதிமுகவில் இணைக்கப்படலாம். அதற்கு முடிவு ஓபிஎஸ் எடுப்பார்.
நாளை கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அதிமுக சார்பில் ஐந்து பிரார்த்தனைகள் செய்ய இருக்கிறோம். கே.பி.முனுசாமி பா.ம.க. சென்றுவிட வேண்டும். உதயகுமார் உண்மை பேச வேண்டும். ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும். சி.வி.சண்முகம் நிதானத்திற்கு வரவேண்டும். எடப்பாடியின் பணம் வேகமாகக் கரைய வேண்டும்.
அண்ணாமலையின் கனிவு உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரே மத்தியில் ஆளக்கூடிய கட்சியை அவன் இவன் எனப் பேசுகிறார். அதற்கு உரிய பதில் சொல்லாமல் பாஜகவும் அண்ணாமலையும் நழுவுவது ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணாமலையிடம் இருந்து சரியான பதிலடியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.