18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தொகுதிகள். அதில் ஒன்று விளாத்திகுளம், மற்றொன்று ஒட்டப்பிடாரம். விளாத்திகுளத்தில் உமா மகேஷ்வரிக்கு தினகரன் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால், ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜூவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.
18 எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட்டபோது, சுந்தர்ராஜிடம் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு பேசி, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த நேரத்தில், புதுச்சேரி ஓட்டலில் தங்கி இருந்த சுந்தர்ராஜ் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், அணி மாறுவது உறுதி என அப்போது பரவலாக பேசப்பட்டது.
ஆனால், உடனடியாக மறுத்த சுந்தர்ராஜ், "அவர்களை (எடப்பாடி தரப்பு) வேண்டுமானால் எங்கள் பக்கம் வரச்சொல்லுங்கள் சேர்த்துக்கிறோம். முடிந்தால் எங்களில் ஒரு ஆளை இழுத்துப் பாருங்கள் பார்ப்போம்" என்றார் தடாலடியாக. அந்த அளவுக்கு தினகரனுக்கு விசுவாசம் காட்டினார். அதேபோல், தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜாவின் பரிந்துரை, ஒட்டப்பிடாரத்தில் அவருக்கு மீண்டும் சீட் கிடைக்க வைத்திருக்கிறது.